கடமலைக்குண்டு அருகே குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி
கடமலைக்குண்டு அருகே குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி நடந்தது.
கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு ஊராட்சிக்கு உட்பட்ட சிதம்பரவிலக்கு கிராமத்திற்கு மின்மோட்டார் மற்றும் குழாய்கள் பழுது காரணமாக கடந்த 1 மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அந்த கிராம பொதுமக்கள் தனியார் தோட்டங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். மின் மோட்டார் பழுதை சீரமைத்து சிதம்பரவிலக்கு கிராமத்திற்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் குமணன்தொழு ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மின் மோட்டார் பழுது நீக்கப்பட்டு, புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. குமணன்தொழு ஊராட்சி தலைவர் சீனிவாசன், ஊராட்சி செயலர் சோனைமுத்து ஆகியோர் பணிகளை பார்வையிட்டனர். பணிகள் நிறைவு அடைந்த பிறகு நேற்று மாலை சிதம்பரவிலக்கு கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.