கடம்பூர் அருகே ஒரு மாதமாக தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானை
கடம்பூர் அருகே ஒரு மாதமாக தோட்டத்தில் புகுந்து காட்டு யானை தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் வனத்துறை வாகனத்தை கிராமமக்கள் சிறைபிடித்தனர்.
டி.என்.பாளையம்
கடம்பூர் அருகே ஒரு மாதமாக தோட்டத்தில் புகுந்து காட்டு யானை தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் வனத்துறை வாகனத்தை கிராமமக்கள் சிறைபிடித்தனர்.
காட்டு யானை
சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் எக்கத்தூர், பசுவனாபுரம், ஏலஞ்சி, சோளத்தூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் தங்களுடைய விளை நிலங்களில் மக்காச்சோளம், வாழை உள்ளிட்டவற்றை பயிர் செய்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானை விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.
வாகனத்தை சிறைபிடிப்பு
பகல் நேரத்திலேயே அடிக்கடி தோட்டங்களுக்குள் நுழைந்துவிடும் இந்த காட்டு யானையை விவசாயிகள் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்து விரட்டி வருகின்றனர்.
இந்தநிலையில நேற்று முன்தினம் இரவு பசுவனாபுரம் கிராமத்தில் புகுந்த யானை அங்கிருந்த ஒரு தோட்டத்தில் இறங்கி பயிர்களை நாசம் செய்தது. இதைப்பார்த்த விவசாயிகள் இதுபற்றி கடம்பூர் வனத்துறையினருக்கு உடனே தகவல் கொடுத்தனர். ஆனால் நேற்று அதிகாலைதான் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் வனத்துறை வாகனத்தை அப்பகுதி விவசாயிகள் சிறைபிடித்து, வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
10 நாட்களில்...
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கடம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள், 'பயிர்களை தொடர்ந்து நாசம் செய்யும் காட்டு யானையை உடனே பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு வனத்துறையினர், 10 நாட்களில் இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்டு சுமார் 4 மணி நேரம் கழித்து வனத்துறை வாகனத்தை விவசாயிகள் விடுவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.