கடம்பூர் அருகேரெயில்வே சுரங்கப்பாதை கட்டுமான கம்பிகளை திருடிய 4 பேர் கைது
கடம்பூர் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை கட்டுமான கம்பிகளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கயத்தாறு:
கடம்பூர் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை கட்டுமான கம்பிகளை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ரெயல்வே கம்பிகள் திருட்டு
கடம்பூர் அருகேயுள்ள பரிவல்லிக்கோட்டை ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கபாதைக்கான கட்டுமான வேலை நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு கட்டுமான வேலைக்காக பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள் திருடப்பட்டு வந்தன. இதுகுறித்து ரெயில்வே சுரங்கப்பாதை கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவன கள மேற்பார்வையாளரான மதுரை கே.கே நகர் திருவேங்கடம் மகன் கோவிந்தராஜ் (வயது 48) கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், தூத்துக்குடி லேபர் காலனி இருளாண்டி மகன் நவநீத கிருஷ்ணன் (30), தூத்துக்குடி மீளவிட்டான் கக்கன்ஜி நகர் தர்மர் மகன் லிங்கராஜ் (35), கடம்பூர் போலீஸ் காலனி மாரிமுத்து மகன் மந்திரமூர்த்தி (23), ஓட்டப்பிடாரம், முப்பிலிவெட்டி கலைஞர் காலனி ஞானராஜ் மகன் சுந்தரபாண்டி (22) மற்றும் சிலர் சேர்ந்து கட்டுமானத்துக்கான இரும்பு கம்பிகளை திருடி சரக்கு வாகனத்தில் கடத்தி சென்றது தெரியவந்தது.
4 பேர் கைது
இதனை தொடர்ந்து கடம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் தலைமறைவாக இருந்த நவநீத கிருஷ்ணன், லிங்கராஜ், மந்திரமூர்த்தி மற்றும் சுந்தரபாண்டி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆயிரம் கிலோ இரும்பு கம்பிகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான இளவேலங்கால் கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் மணிகண்டன், முருகன் மகன் செல்வகுமார் ஆகியோரை கடம்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.