கடம்பூர் அருகே மின் வேலியில் சிக்கி காட்டு யானை சாவு 3 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை
கடம்பூர் அருகே மின் வேலியில் சிக்கி காட்டு யானை செத்தது 3 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா்
கடம்பூர் அருகே மின் வேலியில் சிக்கி காட்டு யானை செத்தது. இதுதொடர்பாக 3 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின் வேலி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் காணப்படுகின்றன. இந்த வனச்சரகத்துக்குட்பட்ட சின்ன குன்றி வனப்பகுதியையொட்டி சிலருக்கு சொந்தமான விவசாய தோட்டங்களும் உள்ளன. இதனிடையே வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீர் தேடி காட்டு யானைகள் வெளியேறி, விவசாய தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்துள்ளன.
எனவே தோட்டங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து விடாமல் தடுக்க சிலர் தோட்டத்தை சுற்றிலும் மின் வேலி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சாவு
இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று சின்ன குன்றி பகுதிக்கு வந்துள்ளது. அப்போது அங்குள்ள தோட்டத்துக்குள் காட்டு யானை நுழைய முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த மின் வேலியில் காட்டு யானை சிக்கியது. இதில் மின்சாரம் தாக்கியதில் அந்த யானை துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இன்று பிரேத பரிசோதனை
இதனிடையே அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கடம்பூர் வனச்சரகர் ரவிச்சந்திரன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செத்துக்கிடந்த காட்டு யானையை பார்வையிட்டனர். அப்போது சுமார் 30 வயதுடைய ஆண் யானை மின்சாரம் தாக்கி செத்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் யானையின் 2 தந்தங்களையும் வனத்துறையினர் கைப்பற்றினர்.
இன்று (சனிக்கிழமை) வனத்துறை கால்நடை டாக்டர் சதாசிவம் தலைமையில் டாக்டர்கள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.
3 பேரிடம் விசாரணை
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக அந்த பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின் வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.