கழுகுமலை அருகேமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
கழுகுமலை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
கழுகுமலை:
கழுகுமலை தேரடி தெருவை சேர்ந்தவர் கந்தமணி(வயது 62). தச்சு தொழிலாளி. இவரும், உறவினரான அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (63) என்பவரும் நேற்று முன்தினம் இரவு கழுகுமலை அருகே உள்ள காலங்கரைப்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ராமச்சந்திரன் ஓட்டினார்.
கழுகுமலை - காலங்கரைப்பட்டி சாலையில் சென்றபோது, பின்னால் உட்கார்ந்து இருந்த கந்தமணி மோட்டார் சைக்கிளில் இருந்து திடீரென்று சாலையில் தவறி விழுந்தார். உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, ராமச்சந்திரன் சென்று பார்த்தபோது, தலையில் பலத்த காயம் அடைந்த கந்தமணி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து விட்டாராம்.
இதுகுறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிகுக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.