கயத்தாறு அருகே வாலிபர் கொலையில் 3 பேர் கைது
கயத்தாறு அருகே வாலிபர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே தளவாய்புரம் நாற்கர சாலையோரத்தில் உள்ள கோவில் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மல்லியை அடுத்த மானகசேரி பகுதியைச் சேர்ந்த அரிச்சந்திரன் மகன் மகேசுவரன் (வயது 25) என்பது தெரிய வந்தது. இவரை அவரது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த செல்வகுமார் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.
மகேசுவரனும், செல்வகுமாரும் மீன் லாரி டிரைவர்களாக வேலை செய்தனர். செல்வகுமாரின் மனைவியை மகேசுவரன் அவதூறாக பேசியதால், அவரை கயத்தாறு அருகே தளவாய்புரத்துக்கு மது அருந்த அழைத்து சென்று இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக செல்வகுமார், அவருடைய நண்பர்களான ரஞ்சித், காளிமுத்து ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான முத்து, முத்துப்பாண்டி ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.