கோபி அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் சாவு
3 ஆடுகள் சாவு
கோபி அருகே உள்ள அளுக்குளி காசியூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 55). விவசாயி. நேற்று வெள்ளியங்கிரி தான் வளர்க்கும் 6 ஆடுகளையும் தன்னுடைய விவசாய நிலத்தில் கட்டி வைத்து விட்டு அளுக்குளியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு பால் கொண்டு சென்றார். சிறிது நேரத்திற்கு பின்னர் ஆடுகள் கட்டப்பட்ட இடத்திற்கு வந்த பார்த்தபோது, விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் விழுந்து ஒரு ஆடு தத்தளித்துக்கொண்டு இருந்தது. உடனே அதை மீட்டு, மற்ற ஆடுகளை தேடி கட்டி வைத்திருந்த இடத்துக்கு சென்றார். அங்கு சென்று பார்த்தபோது, 3 ஆடுகள் கடித்து குதறப்பட்டு பலியாகி கிடந்தன. ஒரு ஆடு படுகாயங்களுடன் உயிருக்கு போராடியபடி இருந்தது.
ஏதோ ஒரு மர்ம விலங்கு அங்கு வந்து ஆடுகளை கடித்துள்ளது. அப்போது தப்பிய ஒரு ஆடு கிணற்றுக்குள் விழுந்தது தெரிந்தது.
இதுகுறித்து வெள்ளியங்கிரி கடத்தூர் போலீசார் மற்றும் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினரும், போலீசாரும் அங்கு வந்து பார்த்தார்கள். ஆடுகள் பலியான இடத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிலேயே புலிகள் சரணாலயம் உள்ளது.
ஏற்கனவே நம்பியூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் சிறுத்தை கடித்து ஆடுகள் பலியான நிலையில் தற்போது அளுக்குளி காசியூரில் மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலியாகி இருப்பது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா அமைத்து ஆடுகளை வேட்டையாடிய மர்ம விலங்கு எது? என்று கண்டுபிடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.