கோபி அருகே தனியார் காகித ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்


கோபி அருகே  தனியார் காகித ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்
x

கோபி அருகே காகித ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே காகித ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

காகித ஆலை

கோபியை அடுத்துள்ள கூகலூர் தண்ணீர்பந்தல்புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காகித ஆலை 20 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை ஆலைக்கு பின்னால் தேக்கி வைக்கப்பட்டு இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் திறந்து விடுவதாக அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

வெளியேற்றப்படும் கழிவு நீரால் விவசாய கிணறுகள், விளைநிலங்கள் மாசு அடைந்துள்ளதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதி பொதுமக்கள் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்தார்கள்.

அதன்பேரில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆலையில் ஆய்வு செய்து, மின் இணைப்பை துண்டித்தார்கள்.

உண்ணாவிரதம்

இந்தநிலையில் காகித ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படுவதாக தண்ணீர்பந்தல்புதூர் பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதை கண்டித்து கடந்த 1-ந் தேதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காகித ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் தற்போது வரை ஆலையை மூடுவதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று ஆலையின் முன்பு கையில் பதாகைகளை ஏந்தியவாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட காகித ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கோஷம் எழுப்பினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு வந்த கோபி தாசில்தார் ஆசியா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் போராட்டக்காரர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து உண்ணா விரதம் நடைபெற்றது.


Related Tags :
Next Story