கோபி அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: தொழிலாளி கைது
கோபி அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டாா்
திருவண்ணாமலை மாவட்டம் சீனதங்கல் பகுதியை சேர்ந்த பெண் தனது 17 வயது மகளை ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள ஒரு தனியார் மில்லுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலைக்காக அழைத்து வந்துள்ளார். உடன் திருவண்ணாமலை மாவட்டம் நேரு நகரை சேர்ந்த பரசுராமன் (41) என்பவரும் வந்தார். ஆனால் வேலைக்கு சேர்ந்த மறு நாளில் இருந்து சிறுமியிடம் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை. இதனால் சிறுமியின் தாயார் கோபி வந்து மில்லில் விசாரித்தார். அப்போது அவரை சேர்த்துவிட்ட நபர் மறுநாளே சிறுமியை அழைத்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிறுமியின் தாய் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாலட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மேனகா வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். அப்போது சிறுமியும், பரசுராமனும் திருப்பூரில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்வதாக பரசுராமன் ஆசை வார்த்தை கூறி கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து பரசுராமனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.