கோபி அருகே தொழிலாளி கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை - பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு
கோபி அருகே தொழிலாளி கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டாா்
கோபி அருகே பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் தொழிலாளி கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
ரத்த வெள்ளத்தில் பிணம்
கோபி அருகே உள்ள பூசாரியூரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 33). தொழிலாளியான இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 20-ந் தேதி கரட்டடிபாளையம் காலேஜ் பிரிவு அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சந்திரசேகரன் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை சந்திரசேகரன் தங்கியிருந்த வீட்டின் கதவு வெகு நேரமாக பூட்டியே கிடப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்தனர். இதனால் சந்தேகம் அடைந்து அறை கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் திறக்கவில்லை. இதனால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது சந்திரசேகரன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பங்குச்சந்தையில் முதலீடு
உடனே இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று சந்திரசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சந்திரசேகரன் பங்குச்சந்தையில் பணம் முதலீடு செய்து வந்துள்ளார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கத்தியால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு்ள்ளார். இதனை உறவினர்கள் பார்த்து அவரை காப்பாற்றியுள்ளனர். இந்த நிலையில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த அவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்பட்டுள்ளது.