கொடுமுடி அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலி
கொடுமுடி அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியானாா்.
கொடுமுடி
கொடுமுடி அருகே உள்ள இச்சிபாளையம் கருத்தியாபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் சந்தோஷ் (வயது 24). நேற்று முன்தினம் காலையில் ஆடுகளை மேய்ப்பதற்காக அந்த பகுதியில் உள்ள தோட்டத்துக்கு சென்றார். அப்போது மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று அந்த பகுதியில் உள்ள கல்குவாரி தண்ணீரில் விழுந்துவிட்டது. உடனே அவர் அந்த ஆட்டை காப்பாற்றுவதற்காக கல்குவாரி தண்ணீரில் இறங்கி உள்ளார். ஆனால் நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ஆடுகள் அனைத்தும் வீட்டுக்கு வந்துவிட்டன. ஆனால் சந்தோஷ் வரவில்லை. இதனால் சந்தோசை அவருடைய பெற்றோர் மற்றும் உறவினா்கள் பல்வேறு இடங்களிலும் தேடினர். அப்போது அந்த பகுதியில் உள்ள கல்குவாரியின் கரை பகுதியில் துணி மற்றும் செல்போன்கள் இருந்ததை கண்டனர். உடனே இதுபற்றி கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கல்குவாரில் மூழ்கிய சந்தோசை சடலமாக மீட்டனர். உடனே கொடுமுடி போலீசார் விரைந்து சென்று சந்தோசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.