குள்ளஞ்சாவடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2½ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது


குள்ளஞ்சாவடி அருகே  வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2½ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்  2 பேர் கைது
x

குள்ளஞ்சாவடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2½ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரின் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜிக்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் நேற்று நள்ளிரவு அம்பலவாணன்பேட்டை பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த வெள்ளக்கண்ணு மகன் ஏழுமலை (வயது 45) என்பவரது வீட்டில் ஏராளமான அட்டைப் பெட்டிகள் இருந்தது. இதை பார்த்த போலீசார் அதனை சோதனை செய்ததில், 35 அட்டை பெட்டிகள் முழுவதும் 1680 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த ஏழுமலை, சமட்டிக்குப்பத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் ராஜா (41) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

போலி ஸ்டிக்கர்

விசாரணையில் அவர்கள் சமட்டிக்குப்பத்தை சேர்ந்த அன்பழகன், சபாபதி, தனசேகரன், புதுச்சேரியை சேர்ந்த குமரன், குள்ளஞ்சாவடியை சேர்ந்த மும்மூர்த்தி ஆகியோருடன் சேர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் செயல்படும் மதுபான தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரூ.2½ லட்சம் மதிப்பிலான மதுபானங்களை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததும், பின்னர் அந்த மதுபாட்டில்களில் போலி ஸ்டிக்கர் ஒட்டி அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து ஏழுமலை, ராஜா ஆகியோரை கைது செய்த போலீசார் ரூ.2½ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அன்பழகன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தி.மு.க. பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story