குறிஞ்சிப்பாடி அருகேபொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்கையில் விஷபாட்டில்களுடன் பங்கேற்றதால் பரபரப்பு
குறிஞ்சிப்பாடி அருகே பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அதில் பங்கேற்ற சிலர் கையில் விஷபாட்டில்களுடன் இருந்ததால் பரபரப்பு நிலவியது.
குறிஞ்சிப்பாடி,
தமிழக அரசு பொங்கல் பண்டிகையின் போது, ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இதில், கடந்த காலங்களில் கரும்பும் இடம் பெற்று இருந்தது.
இதற்காக பன்னீர் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் இருந்து அரசே கூட்டுறவு துறை மூலமாக நேரடியாக கொள்முதல் செய்து வந்தது. இதனால், விவசாயிகளுக்கும் கணிசமான வருமானம் கிடைத்தது.
ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதில் கரும்பு இடம்பெறவில்லை.
விவசாயிகள் ஏமாற்றம்
வருடந்தோறும் அரசு கொள்முதல் செய்து வருவதை போன்று, இந்த ஆண்டும் கொள்முதல் செய்வார்கள் என்கிற நம்பிக்கையுடன் கரும்பு சாகுபடி செய்திருந்த விவசாயிகளுக்கு இது ஏமாற்றமாக அமைந்தது.
அந்த வகையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட கோ.சத்திரம், மதனகோபாலபுரம், கோரணப்பட்டு, அம்பலவாணன்பேட்டை, ஆயிப்பேட்டை, அப்பியம்பேட்டை, வெங்கடாம்பேட்டை, சிவநந்திபுரம், பேய்க்காநத்தம், கட்டியங்குப்பம், தம்பிப்பேட்டை, தோப்புக்கொல்லை, த.பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் ஆயிரத்து 500 ஏக்கருக்கு மேல் பன்னீர் கரும்பு சாகுபடி செய்திருந்தனர்.
கையில் கரும்புடன் மறியல்
இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று காலை 10.30 மணிக்கு குள்ளஞ்சாவடியில் கடலூர்- விருத்தாசலம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் தங்களது கைகளில் கரும்புகளை ஏந்தி பங்கேற்றனர். சிலர் கையில் விஷ பாட்டிலும் வைத்திருந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த கடலூர் கோட்டாட்சியர் அதியமான்கவியரசு மற்றும் குள்ளஞ்சாவடி போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்ப்பதுடன், இதற்காக எங்களிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஆம்புலன்சுக்கு வழிவிட்ட போராட்டக்காரர்கள்
அதிகாரிகள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மறியல் போராட்டம் தொடர்ந்து நீடித்தது.
இதன் காரணமாக அந்த வழியாக சென்ற வாகனங்கள், பெருமாள் ஏரிக்கரை வழியாக ராமநாதகுப்பம், ஆயிக்குப்பம் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மறியல் நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தது. இதை பார்த்த போராட்டக்காரர்கள் அவசர ஊர்தியான ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கிறோம் என்று அறிவித்தனர். மேலும், போராட்டத்தின் போது வந்த ஆம்புலன்சுகளுக்கு மட்டும் போராட்டக்காரர்கள் வழிவிட்டனர்.
4½ மணி நேரம் நீடித்தது
இந்தநிலையில், மாலை 3.15 மணி அளவில் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதில், பேச்சுவார்த்தை நடத்திய கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, இதுகுறித்து கலெக்டரின் கவனத்துக்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதையேற்று அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதன் பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. சுமார் 4½ மணி நேரத்துக்கு மேலாக நீடித்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.