குரும்பூர் அருகேஓடும் காரில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
குரும்பூர் அருகே ஓடும் காரில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கருப்பூரைச் சேர்ந்தவர் மாரிச்சாமி மகன் பொன்குருநாதன் (வயது 25). இவர் நேற்று காலையில் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர்கள், திருச்செந்தூரில் இருந்து வனத்திருப்பதி கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பொன்குருநாதன் ஓட்டினார்.
குரும்பூர் அருகே நல்லூர் பகுதியில் சென்றபோது, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்குருநாதன் உடனே காரை நிறுத்தினார். இதையடுத்து காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கினர். சிறிதுநேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குரும்பூர் அருகே ஓடும் காரில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.