மீனாட்சி அம்மன் கோவில் அருகேபிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ


மீனாட்சி அம்மன் கோவில் அருகேபிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ
x

மீனாட்சி அம்மன் கோவில் அருகே பிளாஸ்டிக் கடையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மதுரை


மீனாட்சி அம்மன் கோவில் அருகே பிளாஸ்டிக் கடையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கடையில் பயங்கர தீ

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதி மறவர் சாவடி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை மற்றும் குடோன் உள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த ஜகிஸ் என்பவர் அதனை நடத்தி வருகிறார். இந்த கடை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் கடையின் மேல் பரப்பில் உள்ள குடோனில் இருந்து நேற்று காலை 8 மணி அளவில் திடீரென்று கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்த அப்பகுதியினர் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு சில விநாடிகளில் கரும்புகை வெளியேறி குடோனில் தீப்பற்றி பரவியது. உடனடியாக திடீர் நகர், தல்லாகுளம், அனுப்பானடி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். 3 மணி நேரத்துக்கு மேலாக போராடியும் பயங்கர தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

7 மணி நேரம்

பிளாஸ்டிக் என்பதால் கரும்புகை அதிக அளவில் வெளியேறிய வண்ணம் இருந்தது. எனவே ரசாயன கலவை கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. பின்னர் மேலும் 2 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. 7 மணி நேரம் போராடி தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீயணைப்பு வாகனங்களுக்கு தேவையான தண்ணீர் மாநகராட்சி லாரிகள் மூலம் வழங்கப்பட்டன. இந்த தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாகின.

சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பழமையான கட்டிடங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. தீயணைப்பு துறையினர், மாநகராட்சி சார்பாக பழமையான கட்டிடங்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த தீ விபத்தால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.


Related Tags :
Next Story