மெஞ்ஞானபுரம் அருகே தொழிலாளி உள்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு
மெஞ்ஞானபுரம் அருகே தொழிலாளி உள்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டப்பட்டனர்.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சத்தியாநகர் வடக்கு தெருவைச் சேர்ந்த சுடலை மகன் கணேசன் (வயது49). இவரது மனைவி இசக்கியம்மாள் (45). தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கணேசன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்துள்ளார். அப்போது இவரது வீடுமுன்பு இதே தெருவைச் சேர்ந்த ஆறுமுகத்துக்கும்(25), வேம்பு என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். அப்போது கணேசனும், அவரது மகன்களும் சமரசம் செய்து வைக்க சென்றுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் சமரசம் செய்ய முயன்ற கணேசனையும், அவரது மகன்களையும் சரமாரியாக அடித்து உதைத்து விட்டு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நேற்று காலையில் ஆறுமுகம் தனது கூட்டாளிகளான தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்த முருகன் மகன்கள் பழனி (25), ஐயப்பன் (21), முனியாண்டி மகன் சுடலை முத்து, மூக்கையா மகன் மாயாண்டி (26) கிருஷ்ணன் மகன் ஐய்யப்பன் (25), முனியசாமி மகன் வைரவன் (30), மணிராஜ் மகன் மாரிமுத்து (21) ஆகியோருடன் வந்துள்ளார். அவர்கள் கணேசனை உருட்டு கட்டை, கம்பால்தாக்கியதுடன், அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதை தடுக்க முயன்ற கணேசன் மகன்கள் பாலமுருகன், காளிமுத்து, உறவினர்களான மாரியப்பன், கருப்பசாமி ஆகியோரும் அரிவாளால் வெட்டப்பட்டனர்.
இவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் ெமஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனி, ஐயப்பன், சுடலை முத்து, மாயாண்டி, மற்றொரு ஐயப்பன், வைரவன், மாரிமுத்து ஆகிய 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயமைடந்த ஆறுமுகமும் திருச்செந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.