மொடக்குறிச்சி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில், வீடுகள்-கடைகள் இடித்து அகற்றம் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
வீடுகள்-கடைகள் இடித்து அகற்றம்
மொடக்குறிச்சி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில், வீடுகள்-கடைகளை இடித்து அகற்றி நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆக்கிரமிப்புகள்
மொடக்குறிச்சியை அடுத்த 46 புதூர் அருகே உள்ள ஆனைக்கல்பாளையம் ரிங் ரோட்டில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் சென்றது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அங்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நோட்டீஸ் விடுத்தனர். ஆனால் காலக்கெடு முடிந்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் ஆனைக்கல்பாளையம் சென்றனர். பின்னர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் சாலை ஆய்வாளர் வினோத்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் ஆனைக்கல்பாளையம் ரிங் ரோட்டில் இருந்து 46 புதூர் ரிங் ரோடு வரை உள்ள பகுதிகளை அளவீடு செய்தனர்.
இடித்து அகற்றம்
இதில் 2 கோவில்கள், 3 வீடுகள், 2 கடைகள் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ளது என கண்டறியப்பட்டது. இதனையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி தொடங்கியது. இதையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க மொடக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
3 வீடுகள், 2 கடைகள் மற்றும் மதுரை வீரன் சாமி கோவில் ஆகியவை இடித்து அகற்றப்பட்டன. தொடர்ந்து 46 புதூர் புறநகர் பஸ் நிலையம் அருகே உள்ள கருப்பண்ணசாமி கோவிலை இடிக்க முற்பட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த கோவிலை இடிக்க கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதன் காரணமாக அந்த கோவிலை இடிக்காமல் விட்டுவிட்டனர். அதனைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) டிஜிட்டல் மூலம் சர்வே செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.