நம்பியூர் அருகே கிணற்றுக்குள் 2 நாட்களாக தவித்த முதியவர் உயிருடன் மீட்பு


நம்பியூர் அருகே கிணற்றுக்குள் 2 நாட்களாக தவித்த முதியவர் உயிருடன் மீட்பு
x

நம்பியூர் அருகே கிணற்றுக்குள் 2 நாட்களாக தவித்த முதியவர் உயிருடன் மீட்கப்பட்டாா்.

ஈரோடு

நம்பியூர்

நம்பியூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது65). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரங்கநாதபுரம் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் அவர் தவறி விழுந்தார். கிணற்றில் 20 அடிக்கு தண்ணீர் இருந்தது. இதனால் அவர் சத்தம் போட்டுள்ளார். ஆனால் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் யாரும் செல்லவில்லை.

இதனால் பழனிச்சாமி 2 நாட்களாக கிணற்றில் பாறை இடுக்கை பிடித்தபடி இருந்துள்ளார். மேலும் உணவு, தண்ணீரின்றி தவித்து வந்துள்ளார். இதற்கிடையே அவரை காணாததால் உறவினர்கள் தேடி பார்த்தனர். இந்த நிலையில் கிணற்றின் அருகே ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் சத்தம் கேட்டு உள்ளே பார்த்தபோது பழனிச்சாமி கிணற்றின் உள்ளே தவித்து கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர் இதுபற்றி நம்பியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கயிறு கட்டி பழனிச்சாமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்டார். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story