ஓட்டப்பிடாரம் அருகே மூதாட்டி வீட்டில் 20¾ பவுன் நகை திருட்டு
ஓட்டப்பிடாரம் அருகே, மூதாட்டி வீட்டில் 20¾ பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே, மூதாட்டி வீட்டில் 20¾ பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மூதாட்டி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள டி.அய்யப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசியம்மாள் (வயது 70). இவருடைய கணவர் சுப்பிரமணியன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் தூத்துக்குடியில் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் காசியம்மாள் நேற்று முன்தினம் காலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நகை திருட்டு
இது குறித்து நாரைக்கிணறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், நாரைக்கிணறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பீரோவில் இருந்த மூன்று சங்கிலிகள், நெக்லஸ் உள்பட 20¾ பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
வலைவீச்சு
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவான ரேகைகளை பதிவு செய்து ஆய்வு செய்தனர்.
இதுபற்றி காசியம்மாள் மகள் முருகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் நாரைக்கிணறு போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.