ஓட்டப்பிடாரம் அருகேமாட்டு வண்டி பந்தயத்தில்சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்


ஓட்டப்பிடாரம் அருகேமாட்டு வண்டி பந்தயத்தில்சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. அதை சாலையோரம் நின்று பார்த்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர்.

மாட்டு வண்டி பந்தயம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பரமன்பச்சேரி கிராமத்தில் காளியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி மற்றும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி ஆகிய 3 பிரிவுகளாக இந்த பந்தயம் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. பந்தயத்திற்கு ஊர் நாட்டாண்மைகள் பன்னீர்செல்வம், பெருமாள்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

சீறிப்பாய்ந்து சென்றன

பெரிய மாட்டு வண்டி பந்தயமானது 15 கிலோமீட்டர் தூரம் நடந்தது. இதில் 5 வண்டிகள் கலந்து கொண்டன. யூனியன் துணை தலைவர் காசிவிஸ்வநாதன் தொடங்கி வைத்தார். பந்தயம் தொடங்கியதுமே மாட்டு வண்டியில் பூட்டப்பட்டு இருந்த காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இலக்கை அடையும் வரை போட்டிப்போட்டு வண்டியை ஓட்டிச்சென்றனர்.

இதில் இலக்கை எட்டி முதல் பரிசை வேலங்குளம் கண்ணன் மாட்டு வண்டி தட்டிச் சென்றது. 2-வது பரிசை சக்கம்மாள்புரம் பரமசிவம் வண்டியும், 3-வது பரிசை மஞ்சநாயக்கன்பட்டி வீரஜோதி வண்டியும் பெற்றன.

சிறிய வண்டி-பூஞ்சிட்டு வண்டி

தொடர்ந்து சிறிய மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. 9 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த பந்தயத்தில் 10 வண்டிகள் பங்கேற்றன. போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் தொடங்கி வைத்தார். இதில் சிந்தலக்கட்டை பொன்னம்மாள் மாட்டுவண்டி முதல் பரிசையும், மேட்டூர் அனந்தகுமார் வண்டி 2-வது பரிசையும், மணக்கரை மலைபார்வதி வண்டி 3-வது பரிசையும் பெற்றன.

பின்னர் பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. 6 கிலோமீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்ட இந்த போட்டியில் 24 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. முதலிடத்தை கயத்தாறு வானமலை பெருமாள் மாட்டு வண்டியும், 2-வது இடத்தை கச்சேரி தளவாய்புரம் ஈஸ்வரன் வண்டியும், 3-வது இடத்தை வள்ளியூர் ஆனந்த் வண்டியும் பிடித்தன.

இந்த பந்தயத்தில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.


Next Story