ஓட்டப்பிடாரம் அருகே காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
ஓட்டப்பிடாரம் அருகே தொடர் மின்தடையை கண்டித்து காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே தொடர் மின்தடையை கண்டித்து காலிகுடங்களுடன் பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர் மின்தடை
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் பெய்த மழையில் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது.
இதனால் கிராமத்திற்கு மின்வினியோகம் தடைபட்டது. இது குறித்து கிராம பொதுமக்கள் மின்சாரவாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் கடந்த நான்கு நாட்களாக டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது நீக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த கிராமம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது. மேலும், பகல் நேரங்களிலும் மின்சாரமின்றி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக குடிநீர் வினியோகமும் தடைபட்டுள்ளதால், தட்டுப்பாடு நிலவுகிறது.
பெண்கள் சாலைமறியல்
இதனால் ஆத்திரமடைந்த டிரான்ஸ்பார்மர் பழுதை நீக்கி கிராமத்திற்கு மின்சார வினியோகம் செய்யக் கோரி நேற்று காலையில் பசுவந்தனை-ஓசநூத்து சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்கு ஆதரவாக கிராம மக்கள் அனைவரும் மறியலில் பங்கேற்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் சீதாராமன் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீஸ் அதிகாரிகள் வாக்குறுதி
இதில், உடனடியாக புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து முறையாக மின்சார வினியோகத்துக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் வாக்குறுதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து பெண்களும், பொதுமக்களும் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.