பண்ருட்டி அருகே காதல் மனைவியுடன் குடும்பம் நடத்த 50 பவுன் நகை கேட்ட வாலிபருக்கு வலைவீச்சு
பண்ருட்டி அருகே காதல் மனைவியுடன் குடும்பம் நடத்த 50 பவுன் நகை கேட்ட வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பொன்னங்குப்பத்தை சேர்ந்தவர் சேகர் மகன் குமரவேல் (வயது 33). இவரும் பண்ருட்டி விழமங்கலத்தை சேர்ந்த அழகேசன் மகள் அருணாதேவி(32) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 14.6.2021 அன்று கொள்ளுக்காரன்குட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும், அருணாதேவியின் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தனர்.
வலைவீச்சு
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குமரவேல் தனது வீட்டிற்கு சென்றவர், அதன் பிறகு திரும்பி வரவில்லை. இதுகுறித்து அருணாதேவி, குமரவேலை தொடர்பு கொண்டு கேட்ட போது, தனக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 50 பவுன் நகையை, பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி கொடுத்தால் தான் குடும்பம் நடத்துவேன் என்று கூறிவிட்டார். இதுதொடர்பாக அருணாதேவியின் குடும்பத்தினர், குமரவேலிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை. இதுகுறித்து அருணாதேவி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரவேலை தேடி வருகின்றனர்.