பாட்டவயல் அருகே பழுதான சாலையால் பாிதவிக்கும் வாகன ஓட்டிகள்-உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பாட்டவயல் அருகே பழுதான சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
பந்தலூர்
பாட்டவயல் அருகே பழுதான சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
பழுதான சாலை
பந்தலூர் தாலுகா பாட்டவயல்அருகே கொட்டாடு முக்குபாடியில் ஏராளமான ஆதிவாசி மக்களும் பொதுமக்களும் குடியிருந்து வருகின்றனர். வெள்ளேரியிலிருந்து கொட்டாடு செல்லும் சாலையில் வலது புறத்தில் சாலை தொடங்கி முக்குபாடி வழியாக மீண்டும் கொட்டாடுவரை செல்கிறது. இந்த சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. அதனால் பொதுமக்கள் புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக தார்சாலை போடப்பட்டது.
வாகன ஓட்டிகள் அவதி
இந்த சாலை தரம் இல்லாமல் அமைக்கப்பட்டதால் தற்போது மீண்டும் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பழுதான சாலையால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மேலும் பொதுமக்கள் மற்றும் மலை வாழ் மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகிறார்கள். அதேபோல் அவசர தேவைகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. தினமும் விபத்துகளும் நடந்து வருகின்றன. அதனால் பழுதான சாலையை சீரமைத்து தரமான தார்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.