பெரியகுளம் அருகேவீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்
பெரியகுளம் அருகே வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடந்தது.
பெரியகுளம் அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 22). இவரும், 15 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் கடந்த 4-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் அவர்களை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி மாரிமுத்துவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். மேலும் பிரேத பரிசோதனை முடிந்தும் மாரிமுத்துவின் உடலை தற்போது வரை அவரின் பெற்றோர் வாங்கவில்லை.
இந்நிலையில் தற்கொலை சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, இந்திய ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் பெரியகுளம் அருகே காந்திநகர் கும்பக்கரை பிரிவு பகுதியில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை பிடித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.