பெருந்துறை அருகே தூங்கிக்கொண்டிருந்த குழந்தை பாம்பு கடித்து சாவு
பாம்பு கடித்து சாவு
மேற்கு வங்காள மாநிலம் வடக்கு பர்கானா மாவட்டம், மாலிக்காபூர் பகுதியைச் சேர்ந்தவர் முகுல் காசி (வயது 32). கட்டிடத் தொழிலாளி. அவரது மனைவி பஜூலா காத்தூன் (23). இவர்களுக்கு 2 வயதில் பர்ஹான் காசி என்கிற ஆண் குழந்தை மற்றும் 2 பெண் குழந்தைகள்.
கடந்த 8-ந் தேதி இரவு குடும்பத்தினர் 5 பேரும் வீட்டுக்குள் தரையில் விரிப்பு விரித்து படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். இந்தநிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை பர்ஹான்காசி திடீரென அலறினான். இதனால் பதறிப்போன முகுல் காசி, படுக்கையில் இருந்து எழுந்து மின் விளக்கை போட்டு பார்த்த போது, குழந்தை பர்ஹான்காசி அருகே கட்டுவிரியன் பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. உடனடியாக முகுல்காசி பாம்பு தீண்டிய தனது குழந்தையை தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பர்ஹான் காசி இறந்தான்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.