பெருந்துறை அருகே கள்ளக்காதலியை கொலை செய்த வடமாநில தொழிலாளி கைது


பெருந்துறை அருகே கள்ளக்காதலியை கொலை செய்த வடமாநில தொழிலாளி கைது
x

பெருந்துறை அருகே கள்ளக்காதலியை கொலை செய்த வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே கள்ளக்காதலியை கொலை செய்த வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதல்

பெருந்துறையை அடுத்துள்ள கந்தாம்பாளையத்தில் தனியார் விசைத்தறி கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விசைத்தறி கூடத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அன்கீத்குமார் (வயது 38) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இதேபோல் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரேஷ்மா காதுகான் (36). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு ரேஷ்மா காதுகான் பிரிந்து விட்டார். இதனால் அவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வந்து அங்கு உள்ள கந்தாம்பாளையம் விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்து வந்தார்.

ஒரே விசைத்தறி கூடத்தில் ரேஷ்மா காதுகானும், அன்கீத் குமாரும் வேலை பார்த்து வந்ததால் அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.

மர்ம சாவு

இந்த நிலையில், கடந்த மாதம் அன்கீத் குமாருக்கும், ரேஷ்மா காதுகானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, கடந்த 13-ந் தேதி ரேஷ்மா காதுகான் கந்தாம்பாளையம் விசைத்தறி கூடத்துக்கு அருகே உள்ள தனியார் பள்ளிக்கூட சுற்றுச்சுவரை ஒட்டியபடி, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ரேஷ்மா காதுகானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பிரேத பரிசோதனை முடிவில் ரேஷ்மா காதுகான் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மர்ம சாவின் வழக்கை கொலை வழக்காக மாற்றினர். மேலும் அவரை கொலை செய்தது அவருடைய கள்ளக்காதலன் அன்கீத் குமார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் தேடுவதை அறிந்த அன்கீத் குமார் விசைத்தறி கூடத்தில் இருந்து தலைமறைவாகி விட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அன்கீத் குமார் பெருந்துறைக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஒரு மாதமாக தலை மறைவாக இருந்த அன்கீத் குமாரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story