திட்டக்குடி அருகே 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
திட்டக்குடி அருகே பதுக்கி வைக்கப்பட்ட 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திட்டக்குடி அருகே கொரக்கைவாடி கிராமத்தில் ரேஷன் அரிசியை கடத்தி பதுக்கி வைத்திருப்பதாக கடலூர் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி தலைமையிலான போலீசார் கொரக்கைவாடி கிராமத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள காட்டுகொட்டகை அருகில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு நின்ற 2 பேர் போலீசாரை பார்த்தும் தப்பி ஓடி தலைமறைவானார்கள். இதையடுத்து அந்த பகுதிக்கு சென்று போலீசார் சோதனை செய்த போது, அங்கு 40 கிலோ வீதம் 100 சாக்கு மூட்டைகளில் 4 டன் (4 ஆயிரம் கிலோ) ரேஷன் அரிசியை கடத்தி பதுக்கி வைத்தது தெரிந்தது.
2 பேருக்கு வலைவீச்சு
அதை தப்பி ஓடிய கொரக்கைவாடி கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் மணிகண்டன், நேரு மகன் பாக்கியராஜ் ஆகிய 2 பேரும் சேர்ந்து பதுக்கி வைத்ததும், அவர்கள் தான் போலீசாரை பார்த்து தப்பி ஓடியதும் தெரிந்தது. இதையடுத்து 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்