கம்பம் அருகேவன செயல் விளக்க மைய கட்டுமான பணியில் தொய்வு :விரைந்து முடிக்க கோரிக்கை
கம்பம் அருகே வன செயல் விளக்க மைய கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சிறந்த சுற்றுலா, புண்ணிய தலமாக விளங்குகிறது. இதனால் தினந்ேதாறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா தளத்தை மேம்படுத்துவதற்காக, சுற்றுலா பயணிகளிடம் வன வளம், அதன் சிறப்புகளை எடுத்துக்கூறுதல், பொழுதுபோக்கைப் பயனுள்ளதாக்கும் வகையில் சிறுவர் பூங்கா, கடைகள், வன செயல் விளக்க மையம் அமைக்கும் பணி கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கியது.
இந்த வன செயல் விளக்க மையத்தில் மேகமலை வன உயிரின சரணாலய பகுதியில் உள்ள யானை, புலி, சிறுத்தை, மிளாமான், சிங்கவால் குரங்கு, சாம்பல் நிற அணில், காட்டெருமை, பன்றி மற்றும் பறவைகள் என பலவகை உயிரினங்களின் புகைப்படங்கள், அதன் வாழ்வியல் குறித்த தகவல்கள் வைக்கப்படும். இதேபோல் அரிய வகை மரங்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காரணமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பின்னர் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்றன. ஆனால் பணியில் தொய்வு ஏற்பட்டு 60 சதவீதம் மட்டும் முடிந்துள்ளது. எனவே சிறுவர் பூங்கா, வன விரிவாக்க மைய கட்டிட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.