கம்பம் அருகேசாலையோரம் கட்டுமான கழிவுகள்
கம்பம் அருகே சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கம்பம், ஜன.8-
கம்பம் அருகே சாமாண்டிபுரம், ஆங்கூர்பாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. கம்பத்தில் இருந்து ஆங்கூர்பாளையம் செல்லும் சாலையில் இருபுறமும் விவசாய நிலங்கள் மற்றும் செங்கல் சூளைகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள், விவசாயிகள் மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையோரத்தில் கட்டுமான கழிவுகளான சிமெண்டு சாக்கு பைகள் மற்றும் கழிவுகளை மர்மநபர்கள் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
இந்த பிளாஸ்டிக் சாக்கு பைகள் காற்றில் பறப்பதால் சாலையில் எதிர் திசையில் வருபவர்கள் தெரியாததால் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகின்றன. எனவே சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள கட்டுமான கழிவுகளை அகற்றியும், கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.