புஞ்சைபுளியம்பட்டி அருகேமாட்டு இறைச்சி கடை அமைப்பது குறித்து அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு;பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு


புஞ்சைபுளியம்பட்டி அருகேமாட்டு இறைச்சி கடை அமைப்பது குறித்து அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு;பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
x

புஞ்சைபுளியம்பட்டி அருகே மாட்டு இறைச்சி கடை அமைப்பது குறித்து அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே மாட்டு இறைச்சி கடை அமைப்பது குறித்து அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் ஆய்வு

புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை வளாகத்தில் 13 மாட்டு இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றதையடுத்து நகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரம் மூலம் மாட்டு இறைச்சி கடைகளை இடித்து அகற்றியது.

இதை கண்டித்தும், மாட்டு இறைச்சி கடைகளை மீண்டும் அமைக்க அனுமதி வழங்க கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி எல்லையான நீலிபாளையம் அருகே கடைகள் அமைக்க மனு அளித்த 6 வியாபாரிகளுக்கு கடைகள் அமைத்து தர நகராட்சி கூட்டத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் நீலிபாளையம் அருகே கடைகள் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

இந்த நிலையில் அமைச்சர் சு.முத்துசாமி நீலிபாளையம் அருகே மற்றும் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை வளாகம் பகுதியில் மாட்டு இறைச்சி கடைகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்கள் அமைச்சரிடம், மாட்டு இறைச்சி கடைகளை மீண்டும் இங்கு அமைத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே இங்கு மாட்டு இறைச்சி கடைகள் வேண்டாம். ஊருக்கு வெளியே வேறு எங்காவது அமைத்து கொள்ளுங்கள் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதற்கு அமைச்சர் முத்துசாமி, தகர சீட் அமைத்து சுகாதாரமான முறையில் மாட்டு இறைச்சியை மட்டும் விற்று கொள்ள வியாபாரிகள் உறுதி அளித்துள்ளனர் என்றார். ஆனால் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்த மக்கள், இங்கு செயல்பட்ட கடைகளை அகற்ற நாங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். எனவே இங்கு மாட்டிறைச்சி கடைகள் அமைக்க வேண்டாம் என்றனர்.

பவானிசாகர் அணையில் கழிவுநீர்

இதையடுத்து மாட்டு இறைச்சி கடைகள் அமைப்பது தொடர்பாக, நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் மாட்டு இறைச்சி கடை அமைப்பது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. கூட்டத்தில் இதில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், நகராட்சி தலைவர் தி.ஜனார்த்தனன், துணைத்தலைவர் பி.ஏ.சிதம்பரம் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பவானிசாகர் அணையில் கழிவுநீர் கலப்பது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரியிடம் பேசி உள்ளேன். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சத்தியமங்கலம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் பயனாளிகளுக்கு ஒப்படைக்கவும், புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யவும், மாட்டு இறைச்சிகள் கடை அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை புதிய திட்டத்தின் மூலம் தண்ணீர் நிரப்பவும் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.


Next Story