ராமநத்தம் அருகே நிழற்குடை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
ராமநத்தம் அருகே நிழற்குடை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே உள்ளது ஆலத்தூர் கிராமம். இங்கு ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் பஸ் ஏற வேண்டும் என்றால், சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள ஆலத்தூர் கை காட்டி பஸ் நிறுத்தத்திற்கு வந்து தான் செல்ல வேண்டும்.
ஆனால் இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெயிலிலும், மழையிலும், திறந்த நிலையிலேயே காத்து கிடக்கின்றனர். மேலும் ஆலத்தூரில் இருந்து கை காட்டி வருவதற்கு சாலை வசதியும் இல்லை. இதனால் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆர்ப்பாட்டம்
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆலத்தூர் கிராமத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிழற்குடை மற்றும் சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரியும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இருப்பினும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.