சாத்தான்குளம் அருகேமின்சாரம் தாக்கி 4 பசுமாடுகள் சாவு
சாத்தான்குளம் அருகே மின்சாரம் தாக்கி 4 பசுமாடுகள், ஆடுகள் பலியாகின.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் 4 பசுமாடுகளும், 2 ஆடுகளும்பலியாகின. இந்த சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நிவாரணம் வழங்க கோரியும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மின்கம்பம் சாய்ந்தது
சாத்தான்குளம் அருக உள்ள பேய்க்குளத்தைச் சேர்ந்தவர் பால் மகன் கருப்பசாமி (வயது 45). விவசாயி. இவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் நேற்று காலையில் தன்னுடைய ஆடு, மாடுகளை முனைஞ்சிப்பட்டி செல்லும் சாலையோரமுள்ள காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். அப்போது அப்பகுதியில் பலத்த காற்று வீசியதால் வயலுக்கு செல்லும் மின்கம்பம் சரிந்ததுடன், அதிலிருந்த மின்கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது.
ஆடு, மாடுகள் பலி
இந்த பகுதியில் மேய்ச்சலுக்கு ெசன்ற கருப்பசாமியின் மாடு, ஆடுகள் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே 4 பசுமாடுகளும், 2 ஆடுகளும் அடுத்தடுத்து வயலில் விழுந்து உயிரிழந்தன. இதை பார்த்து கருப்பசாமியும், அவரது குடும்பத்தினரும் கதறி அழுதனர். இதுகுறித்த தகவலின் பேரில் மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதிகக்கு வந்து மின்வினியோகத்தை துண்டித்தனர். இதனால் மேலும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சாலைமறியல்
இதை அறிந்த பேய்க்குளம் கிராம மக்கள் அப்பகுதிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் முனைஞ்சிப்பட்டி-பேய்க்குளம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு ேபாலீசாரும், வருவாய்த்துறையினரும் வந்து விசாரணை நடத்த வேண்டும். ஆடு, மாடுகளை பலி கொடுத்துள்ள விவசாயிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
போக்குவரத்து பாதிப்பு
இதை தொடர்ந்து சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரத்தினராஜ், ஐசக் மகாராஜன், வருவாய்த்துறை, மின்வாரிய அதிகாரிகள், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவர் பெரியசாமி ஸ்ரீதர் ஆகியோர் அப்பகுதிக்கு வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டிருந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிககப்பட்டது.