சத்தி அருகேவேன் டிரைவரை அடித்துக்கொன்றது ஏன்?கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்
சத்தியமங்கலம் அருகே வேன் டிரைவரை அடித்துக்கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே வேன் டிரைவரை அடித்துக்கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை
சத்தியமங்கலம் அருகே உள்ள சாணார்பதி பகுதியை சேர்ந்தவர் அம்மாவாசை மகன் மாரிமுத்து (வயது 37). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மோட்டார்சைக்கிளில் வீட்டை விட்டு வெளியே சென்ற மாரிமுத்து நேற்று முன்தினம் காலை சத்தி-கோவை ரோட்டில் உள்ள ஒரு குடோன் அருகே நெற்றியில் பலத்த ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் மாரிமுத்துவை யாரோ மர்மநபர் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
கைது
இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். மாரிமுத்துவின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது அவர் சத்தியமங்கலம் கொமாரபாளையத்தை சேர்ந்த மோகன் (38) என்பவரிடம் கடைசியாக பேசியது தெரியவந்தது. அரசு ஆஸ்பத்திரியில் 108 ஆம்புலன்சில் டிரைவராக வேலை பார்த்து வந்த அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் மாரிமுத்துவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ேமாகன் போலீசாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-
நண்பர்கள்
நானும், மாரிமுத்துவும் நண்பர்களாக பழகி வந்தோம். மாரிமுத்து கடன் தொல்லையால் அவதிப்பட்டபோது அவ்வப்போது நான் அவருக்கு உதவி செய்து வந்துள்ளேன். இந்த நிலையில் மாரிமுத்துவின் மனைவியுடன் நான் நட்பு ரீதியாக பழகி வந்தேன். ஆனால் மாரிமுத்து என் மீது அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டு பேசி வந்தார். இதனால் நான் அவர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தேன். சம்பவத்தன்று நான் அவரை செல்போனில் சத்தி-கோவை ரோட்டில் உள்ள ஒரு குடோன் அருகே வரக்கூறினேன். அதன்படி அவரும் அங்கு வந்தார்.
கொன்றேன்
அப்போது அங்கு வைத்து என்னிடம் மாரிமுத்து தான் கடன் வாங்கியதற்கு ஒரு நோட்டீஸ் வந்துள்ளதாகவும், ரூ.1 லட்சம் திருப்பி கட்ட வேண்டும் என்றும் கடன் கேட்டார். மாரிமுத்து அடிக்கடி என்னிடம் பணம் கேட்டு நச்சரிப்பதும், அவருடைய மனைவி என்னுடன் பழகுவதை சந்தேகப்பட்டு பேசி வந்ததையும் நினைத்து மேலும் ஆத்திரமடைந்தேன்.
இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். உடனே எனது காரில் வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து மாரிமுத்துவை தாக்கினேன். இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
நடித்தும் காட்டினார்
மாரிமுத்து மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்தது போல அருகில் மோட்டார் சைக்கிளை சாய்த்து கீழே போட்டுவிட்டு என்னுடைய காரில் அங்கிருந்து தப்பி சென்றேன். பின்னர் கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பியை செண்பகப்புதூரில் உள்ள வாய்க்காலில் வீசிவிட்டு தலைமறைவாக இருந்து வந்தேன். இந்த நிலையில் போலீசார் மாரிமுத்துவின் செல்போனை ஆய்வு செய்து என்னை கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு மோகன் தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். மேலும் நடந்த சம்பவம் குறித்து நடித்தும் காட்டினார். இதைத்தொடர்ந்து அவர் வாய்க்காலில் வீசிய இரும்பு கம்பியும் மீட்கப்பட்டது.