சாயர்புரம் அருகே குத்துவிளக்கால் தாக்கி கணவரை கொன்ற பெண்
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே கணவரை குத்துவிளக்கால் தாக்கி மனைவி கொலை செய்தார். மனநிலை பாதித்த மனைவியை பிடித்த போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கூலி தொழிலாளி
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே சிவத்தையாபுரம் பன்னீர்செல்வம் தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 43). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சந்திரமதி (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சந்திரமதிக்கு கடந்த ஓராண்டாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு பூரண குணமாகவில்லை.
குத்துவிளக்கால் சரமாரியாக தாக்குதல்
நேற்று முன்தினம் மாலையில் சந்திரமதி வீட்டில் கணவர், குழந்தைகளுடன் இருந்தார். அப்போது சந்திரமதி வீட்டில் இருந்த பித்தளை குத்துவிளக்கை எடுத்து வந்து திடீரென்று கணவர் பொன்ராஜின் தலையில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் படுகாயமடைந்த பொன்ராஜ் அலறி துடித்தவாறு வீட்டில் இருந்து வெளியே தெருவில் ஓடினார். ஆனாலும் அவரை விரட்டிச் சென்ற சந்திரமதி குத்துவிளக்கால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த பொன்ராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். இதனைப் பார்த்த குழந்தைகள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
சாவு
உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, படுகாயமடைந்த பொன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இரவில் பொன்ராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து சந்திரமதியை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சாயர்புரத்தில் கணவரை குத்துவிளக்கால் தாக்கி மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.