சோலார் அருகேஅரசு பள்ளியில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததுமாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்
மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்
சோலார் அருகே அரசு பள்ளியில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. மாணவ-மாணவிகள் உயிர் தப்பினார்கள்.
பழமை வாய்ந்த கட்டிடம்
சோலார் அருகே மோளகவுண்டன் பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 120 மாணவர்களும், 112 மாணவிகளும் படித்து வருகின்றனர். பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியை உள்பட 10 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்குள்ள பழமை வாய்ந்த கட்டிடம் ஒன்றில் 6-ம் வகுப்பறையும், தலைமை ஆசிரியர் அறையும் செயல்பட்டு் வருகிறது.
கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர். நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் வழக்கம்போல் ஆசிரியர்களும் பள்ளிக்கூடம் வந்து வகுப்பறையை திறந்தனர். அப்போது 6-ம் வகுப்பு செயல்படும் அறையின் ஜன்னல் மேலே உள்ள கான்கிரீட் பெயர்ந்து கீேழ விழுந்து காணப்பட்டது.
உடனே அருகே உள்ள மற்றொரு கட்டிடத்தில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறைக்கு 6-ம் வகுப்பு மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்களுக்கு பாடம் நடத்தினார்கள்.
கல்வி அதிகாரி ஆய்வு
இதுதவிர அந்த கட்டிடம் பல இடங்களில் விரிசல் விழுந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மேலும் தலைமை ஆசிரியை இருக்கும் அலுவலகத்தின் அறையின் கட்டிடமும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா நேற்று மதியம் 3 மணி அளவில் பள்ளிக்கூடத்துக்கு நேரில் சென்றார். பின்னர் சேதமடைந்த கட்டிடங்களை பார்வையிட்டு் விசாரணை நடத்தினார். இதுபற்றி அறிந்ததும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் அங்கு வந்தனர்.
மாணவ-மாணவிகள் தப்பினர்
அவர்கள் அதிகாரியிடம் சேதமடைந்த கட்டிடம் கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. கட்டிடத்தை புதுப்பித்து தருமாறு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சேதமான கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு விரைந்து புதிய கட்டிடத்தை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதற்கு அவர், கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நேற்று முன்தினம் அதிகாலையில் கான்கிரீட் பெயர்ந்து கீழே விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக மாணவ-மாணவிகள் உயிர் தப்பினார்கள்.