ஸ்ரீவைகுண்டம் அருகேகுடிநீர் வடிகால் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


ஸ்ரீவைகுண்டம் அருகேகுடிநீர் வடிகால் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

வெள்ளூர் கிராம மக்கள் நேற்று குடிநீர் கேட்டு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னகுறிச்சி குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் பிரச்சினை

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தகிராம மக்களுக்கு பொன்னங்குறிச்சி தாமிரபரணியிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் சுத்திகரிப்பு செய்து குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இதில், இந்த திட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் பல ஆண்டுகளுக்கு முன்பே பழுதடைந்தது. ஆனாலும் அந்த மோட்டாரை பழுதுநீக்கம் செய்யாமல் மாற்று வழியில் கிராமத்துக்கு தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தண்ணீர் வழங்குவதில் தடை ஏற்பட்டது.

முற்றுகை போராட்டம்

இந்நிலையில், குடிநீர் குழாய் செல்லும் வழியில் உள்ள சில வீடுகளில் மோட்டார் மூலமாக குடிநீரை உறிஞ்சி எடுப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணாததால் வெள்ளூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடி வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் நேற்றுகாலையில் நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோடு அருகிலுள்ள பொன்னங்குறிச்சி தமிழ்நாடு அரசு குடிநீர் வாரிய அலுவலகத்தை பஞ்சாயத்து தலைவர் குமார் பாண்டியன் தலைமையில் கவுன்சிலர் முத்துராஜா உட்பட நூற்றுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் உறுதி

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் வடிவு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், கிராம நிர்வாக அலுவலர் மாடசாமி உள்ளிட்ட ஸ்ரீவைகுண்டம் வருவாய் துறையினர் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதிகாரிகள் வெள்ளூர் கிராம பஞ்சாயத்து தலைவர் குமார் மற்றும் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் போலீசார் போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, நாளை (இன்று) முதல் வெள்ளூர் கிராமத்திற்கு குடிநீர் சீராக வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Related Tags :
Next Story