சூரங்குடி அருகேஎரிவாயு குழாய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சூரங்குடி அருகே எரிவாயு குழாய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் தென்மண்டல குழாய் பதிக்கும் பிரிவு சார்பில் ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சூரங்குடி, விளாத்திகுளம், குறுக்குச்சாலை வழியாக இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த பணிகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் எரிவாயு குழாய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி சூரங்குடி அருகே உள்ள குமாரசக்கனாபுரத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்மண்டல குழாய் பதிக்கும் பிரிவு தலைமை மேலாளர் (இயக்கம்) மிதுன்குமார் சீலம் தலைமை தாங்கினார். மேலாளர் எஸ்.சுந்தர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்படும் அவசரகால சூழ்நிலையை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இயற்கை எரிவாயு குழாய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.