தென்காசி அருகே, காதல் கணவர் கண்முன்னே காரில் இளம்பெண்ணை கடத்திய வழக்கில் 3 பேர் அதிரடி கைது


தென்காசி அருகே, காதல் கணவர் கண்முன்னே காரில் இளம்பெண்ணை கடத்திய வழக்கில் 3 பேர் அதிரடி கைது
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே, காதல் கணவர் கண்முன்னே காரில் இளம்பெண்ணை கடத்திய வழக்கில் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தென்காசி

தென்காசி அருகே, காதல் கணவர் கண்முன்னே காரில் இளம்பெண்ணை கடத்திய வழக்கில் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

இளம்பெண் கடத்தல்

தென்காசி அருகே உள்ள கொட்டாக்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித் (வயது 22). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நவீன் பட்டேல் மகள் குருத்திகா என்பவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்று நாகர்கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நவீன் பட்டேல் மற்றும் அவருடன் 6 பேர் சேர்ந்து வலுக்கட்டாயமாக, காதல் கணவர் வினித் கண்முன்னே குருத்திகாவை தாக்கி ஒரு காரில் கடத்தி சென்றுவிட்டனர். இதுகுறித்து குற்றாலம் போலீசார், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் 7 பேர் மற்றும் குருத்திகா ஆகிய 8 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

வாகன சோதனை

இதற்காக தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், குற்றாலம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இலஞ்சியில் இருந்து மதுரை செல்லும் மெயின் ரோட்டில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

3 பேர் கைது

அதில், இளம்பெண் கடத்தல் வழக்கில் தொடர்புடைய 3 பேர் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் புளியரையைச் சேர்ந்த நாராயணன் மகன் தினேஷ் படேல் (48), இலஞ்சியை சேர்ந்த சுப்பிரமணியன் (52), பிரானூர் பார்டரைச் சேர்ந்த லலித்குமார் மகன் முகேஷ் பட்டேல் (35) ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இவர்கள் கடத்திச் சென்ற இளம்பெண் குருத்திகா எங்கு இருக்கிறார்? என்பது இதுவரை தெரியவில்லை. அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆட்கொணர்வு மனு

இதற்கிடையே மதுரை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் இசக்கிராஜ் என்பவர், இளம்பெண்ணை கண்டுபிடித்து கொண்டுவர வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.


Next Story