தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் புகுந்து மீண்டும் அட்டகாசம் செய்த கருப்பன் யானை; விவசாயிகள் வனத்துறையினரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை


தாளவாடி அருகே  கரும்பு தோட்டத்தில் புகுந்து மீண்டும் அட்டகாசம் செய்த கருப்பன் யானை;  விவசாயிகள் வனத்துறையினரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை
x

தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் புகுந்து மீண்டும் அட்டகாசத்தில் கருப்பன் யானை ஈடுபட்டது. அதை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டவேண்டும் என்று விவசாயிகள் வனத்துறையினரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்கள்.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் புகுந்து மீண்டும் அட்டகாசத்தில் கருப்பன் யானை ஈடுபட்டது. அதை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டவேண்டும் என்று விவசாயிகள் வனத்துறையினரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்கள்.

கருப்பன் யானை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான யானைகள் உள்ளன. உணவு, தண்ணீரை தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இதில் குறிப்பாக கருப்பன் என்ற ஒற்றை யானை கடந்த சில நாட்களுக்கு முன் திகனாரை மற்றும் தர்மாபுரம் கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து 2 விவசாயிகளை மிதித்து கொன்றது.

போராட்டம்

ஆட்கொல்லி யானையான கருப்பனை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் என 2 கும்கி யானைகள் தாளவாடியை அடுத்த இரியபுரம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டன.

அதைத்தொடர்ந்து கும்கி யானைகளின் உதவியுடன் கருப்பன் யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விரட்டினர்.

மீண்டும் வந்தது

இந்தநிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட திகனாரை அருகே உள்ள ஜோரகாடு பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்ற விவசாயி தன்னுடைய தோட்டத்தில் கரும்பு, வாழை சாகுபடி செய்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 10 மணிஅளவில் வனப்பகுதியில் இருந்து மீண்டும் வந்த கருப்பன் யானை செல்வக்குமாரின் தோட்டத்துக்குள் புகுந்து கரும்பை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது.

சத்தம் கேட்டு ஓடிச்சென்ற செல்வக்குமார் தோட்டத்தில் யானை நிற்பதை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகளுக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்தார். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து 3 மணி நேரம் போராடி யானையை காட்டுக்குள் விரட்டினார்கள். எனினும் கரும்பு பயிர்கள் நாசமடைந்தன.

கண்ணீர்மல்க கோரிக்கை

இந்த நிலையில் நேற்று மதியம் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் ஜீர்கள்ளி வனச்சரக அலுவலகத்துக்கு ெசன்று வனத்துறையினரிடம், 'ஏற்கனவே 2 பேரை கருப்பன் யானை கொன்றுவிட்டது. இப்போது மீண்டும் ஊருக்குள் வர தொடங்கிவிட்டது. மீண்டும் யாரையாவது யானை தாக்கும் முன்பு அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவேண்டும், அது வெளியேறும் இடத்தில் அகழி அமைக்க வேண்டும். மேலும் நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்' என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்கள்.


Next Story