தாளவாடி அருகே புலி தாக்கி பசுமாடு படுகாயம்
தாளவாடி அருகே புலி தாக்கி பசுமாடு படுகாயம் அடைந்தது.
தாளவாடி
தாளவாடி அருகே உள்ள நேதாஜி வீதியை சேர்ந்தவர் நாகம்மா (வயது 48). விவசாயி. இவர் 3 மாடுகள் வளர்த்து வருகிறார். இவற்றை வழக்கம் போல் மேய்ச்சலுக்கு ஊரையொட்டி உள்ள தனது மானாவாரி நிலத்தில் விட்டிருந்தார். அதே போல் அப்பகுதியை சேர்ந்த சிலர் மாடுகளை அங்கு மேய்த்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென நாகம்மாவின் பசு மாடு கத்தும் சத்தம் போட்டது. இதனால் அருகே மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த புலி ஒன்று பசுமாட்டை கடித்து கொண்டிருந்தது.
இதனால் சத்தம் போடவே, புலி அங்கிருந்து அருகே உள்ள புதருக்குள் சென்று மறைந்துகொண்டது. உடனே இதுபற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று மாட்டை பார்வையிட்டு சென்றனர்.
புலி நடமாட்டத்தால் அந்த பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.