தாளவாடி அருகே யானை இறந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் மின்வேலியில் சிக்கி பலியானது அம்பலம்


தாளவாடி அருகே  யானை இறந்த   விவகாரத்தில் திடீர் திருப்பம்  மின்வேலியில் சிக்கி பலியானது அம்பலம்
x

மின்வேலியில் சிக்கி பலியானது அம்பலம்

ஈரோடு

தாளவாடி அருகே யானை இறந்து கிடந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, அது மின்வேலியில் சிக்கி பலியானது அம்பலமாகியுள்ளது.

பெண் யானை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.

இதில் யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட அருள்வாடி கிராமத்தில் இருந்து மீன்கரை செல்லும் சாலையில் ஓடை அருகே நேற்று முன்தினம் பெண் யானை இறந்து கிடப்பதாக ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜீர்கள்ளி வனச்சரகர் ராமலிங்கம் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

மின்வேலியில் சிக்கியது

தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை சம்பவ இடத்திற்கு கால்நடை துறை மருத்துவர் சதாசிவம் சென்று யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். அப்போது யானையின் உடலில் பெரிய காயம் இருந்தது தெரியவந்தது.

இந்தநிலையில் யானை இறந்து கிடந்த இடம் அருகே உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்து வரும் மாதேவன் என்பவரிடம் விசாரணை நடத்த வனத்துறையினர் சென்றார்கள். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். இதனால் அவர்மீது சந்தேகம் வலுத்தது. இந்தநிலையில் நேற்று மாதேவனை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அதில் தன்னுடைய தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களை பாதுகாக்க அவர் உயர் அழுத்த மின்வேலி அமைத்து இருந்ததும், அதில் யானை சிக்கி பலியானதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த மாதேவனை வனத்துறையினர் கைது செய்தார்கள்.


Next Story