தாளவாடி அருகே குட்டியுடன் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்


தாளவாடி அருகே குட்டியுடன் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்
x

தாளவாடி அருகே குட்டியுடன் வந்து வாகனங்களை காட்டு யானைகள் வழிமறித்தன

ஈரோடு

தாளவாடி அருகே குட்டியுடன் வாகனங்களை காட்டு யானைகள் வழிமறித்தன.

வறட்சி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்டது தாளவாடி வனச்சரகம். இந்த வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான் போன்ற வனவிலங்குகள் காணப்படுகின்றன.

தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி அங்குள்ள வனச்சாலையை வனவிலங்குகள் அடிக்கடி கடந்து செல்வது வாடிக்கையாகி விட்டது.

வாகனங்களை வழிமறித்த யானைகள்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கள்ளி அருகே யானைகள் கூட்டமாக குட்டிகளுடன் வந்தன. பின்னர் அந்த யானைகள் குட்டியுடன் அந்த வழியாக வாகனங்களை மறித்தபடி நின்றன. இதை கண்டதும், வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனத்தை சற்று தூரத்தில் நிறுத்தி கொண்டனர்.

பின்னர் வாகனத்தில் இருந்தவர்கள் குட்டியுடன் சாலையை மறித்தபடி நின்ற யானைகளை தங்களுடைய செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். 15 நிமிடம் சாலையிலேயே நின்ற யானைகள் பிறகு தானாக வனப்பகுதிக்குள் சென்றன. இதைத்தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக தாளவாடி பகுதியில் வனச்சாலைகளை அடிக்கடி கடந்து செல்கின்றனர். எனவே வாகனங்களில் செல்பவர்கள் தங்களுடைய வாகனங்களை மெதுவாக மிகவும் கவனத்துடன் இயக்க வேண்டும். வனவிலங்குகளுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்க கூடாது. செல்பி எடுக்க கூடாது,' என அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story