தேனி அருகேமோட்டார்சைக்கிள்-வேன் மோதல்; பெண் பலி
தேனி அருகே மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள தும்மலப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மனைவி முருகேஸ்வரி (வயது 50). இவர் தேனி மாவட்டம் போடி அருகே அணைக்கரைப்பட்டியில் ஒரு தோட்டத்தில் செயல்படும் கரும்பில் இருந்து வெல்லம் காய்ச்சும் ஆலையில் வேலை செய்து வந்தார். அங்கு அவருடைய தம்பி முத்துக்குமார் (34) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு முருகேஸ்வரி தனது தம்பியுடன் மோட்டார் சைக்கிளில் தேனிக்கு வந்தார். பொருட்கள் வாங்கிவிட்டு அவர்கள் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
தேனி-போடி சாலையில் கோடாங்கிபட்டியில் உள்ள தனியார் மசாலா தயாரிப்பு மில் அருகில் சென்ற போது, பின்னால் அசுர வேகத்தில் வந்த சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர். முருகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை தொடர்ந்து சரக்கு வேனை அங்கேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்த முத்துக்குமார் தனது அக்காவின் பிணத்தை பார்த்து கதறி அழுதார்.
சம்பவ இடத்துக்கு பழனிசெட்டிபட்டி போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த முத்துக்குமாரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான முருகேஸ்வரி உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.