தேனி அருகேரூ.5½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்:2 பேர் கைது
தேனி அருகே ரூ.5½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார், கொடுவிலார்பட்டி-தேனி சாலையில் ஒரு செங்கல் சூளை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து, அவர் வைத்திருந்த மூட்டையை சோதனையிட்டனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. விசாரணையில் அவர், தேனி ராஜாலைன் பகுதியை சேர்ந்த குமரேசன் (வயது 44) என்பதும், கொடுவிலார்பட்டியில் ஒரு குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்வதாகவும் தெரியவந்தது. இதையடுத்து கொடுவிலார்பட்டியில் உள்ள குடோனில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தன.
பின்னர் குமரேசனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4, ஆயிரத்து 80 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் ஆகும். மேலும் விசாரணையில் சொக்கத்தேவன்பட்டியை சேர்ந்த முத்து ஈஸ்வரன் (41), தேனி பங்களாமேட்டை சேர்ந்த அருள், குச்சனூரை சேர்ந்த சரவணன் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும், அவர்களும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து முத்து ஈஸ்வரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.91 ஆயிரம் மதிப்பிலான 858 பாக்கெட் புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.
பின்னர் அருள், சரவணன் ஆகியோர் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். அருள் வீட்டில் இருந்து ரூ.51 ஆயிரம் மதிப்பிலான 1,194 பாக்கெட் புகையிலை பொருட்களையும், சரவணன் வீட்டில் இருந்து ரூ.91 ஆயிரம் மதிப்பிலான 1,302 பாக்கெட் புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.5 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள அருள், சரவணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.