தேனி அருகே8 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது
தேனி அருகே கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி அருகே கோடாங்கிபட்டிக்கு ஒரு வாலிபர் கஞ்சா கடத்தி வருவதாக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேனி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் கோடாங்கிபட்டி தேவர் சிலை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு வந்த பஸ்சில் இருந்து வாலிபர் ஒருவர் கையில் பையுடன் இறங்கினார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அப்போது அதற்குள் 8 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் வடக்கு மெயின் தெருவை சேர்ந்த நித்திஷ்குமார் (வயது 22) என்பது தெரியவந்தது. அந்த கஞ்சாவை அவர் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்ததாகவும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்திஷ்குமாரை கைது செய்தனர்.