திருமங்கலம் அருகே காதல் ஜோடியை ஏற்பதாக அழைத்துவந்து மாப்பிள்ளையை தாக்கி புதுப்பெண் கடத்தல்- 'காதல்' சினிமா பட பாணியில் துணிகரம்
காதல் ஜோடியை ஏற்பதாக அழைத்துவந்து மாப்பிள்ளையை தாக்கி புதுப்பெண் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமங்கலம்,
காதல் ஜோடியை ஏற்பதாக அழைத்துவந்து மாப்பிள்ளையை தாக்கி புதுப்பெண் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காதல் திருமணம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர் மதுரை கே.கே.நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் பிரியவரதன் (வயது 24).
திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவருடைய மகள் சினேகா (21).
திருமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது பிரியவரதனுக்கும், சினேகாவுக்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து காதல்ஜோடி, கோவையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
புதுப்பெண் கடத்தல்
இந்த நிலையில் பிரியவரதனின் பெற்றோர், இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டு அவர்கள் இருவரையும் மதுரைக்கு அழைத்து வந்தனர். பின்னர், சினேகாவின் பெற்றோரும் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டதாக அவர்களிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மகள் சினேகாவையும், மருமகன் பிரியவரதனையும் தங்கள் ஊரான சாத்தங்குடிக்கு அழைத்துச் செல்வதாக கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் உரப்பனூர் கண்மாய் அருகே பிரியவரதன் மற்றும் அவருடைய தாயார் சின்னம்மாள் ஆகிய இருவரையும் தாக்கி காரில் இருந்து கீேழ தள்ளிவிட்டதுடன், புதுப்பெண் சினேகாவை காரில் கடத்திச் சென்றதாக தெரியவருகிறது.
சினிமா பட பாணியில்...
மனைவி சினேகாவை அவருடைய குடும்பத்தினர் கடத்திச் சென்றதாக பிரியவரதன் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி, ஜீவானந்தம், ஜெயலட்சுமி உள்ளிட்ட 4 பேர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காதல் சினிமா பட பாணியில் காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக கூறி அழைத்து வந்து மாப்பிள்ளையை தாக்கிவிட்டு, பெண்ணை அவருடைய குடும்பத்தினர் அழைத்துச் செல்வது போல் இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.