திருச்செந்தூர் அருகே அரசு பள்ளிதலைமை ஆசிரியை சஸ்பெண்டு
திருச்செந்தூர் அருகே, மாணவன் இறந்த விவகாரத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆறுமுகநேரி:
திருச்செந்தூர் அருகே, மாணவன் இறந்த விவகாரத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மாணவன் சாவு
திருச்செந்தூரை அடுத்துள்ள தோப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவபெருமாள்-செல்வகுமாரி. இவர்களின் 2-வது மகன் அஜய்குமார். (வயது 10).
இவன் அந்த பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2-ந் தேதி அஜய்குமார் உள்ளிட்ட சில மாணவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாடி கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென அஜய்குமார் கீழே விழுந்ததாகவும், அதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவனை திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் நெல்லையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கிருந்து பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பு பரிதாபமாக இறந்தான்.
போராட்டம்
மாணவன் உடலை பெற்றோர்கள், உறவினர்கள் வாங்க மறுத்தனர். அஜய்குமார் சாவில் மர்மம் உள்ளது, அதை போலீசார் விசாரிக்க வேண்டும், பள்ளியின் தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இறந்த மாணவனின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் காலை திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
பணியிடை நீக்கம்
இதைத்தொடர்ந்து உதவி கலெக்டர் புகாரி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவர் சாவு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. மேலும் உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து அஜய்குமார் உடலை பெற்றுச்சென்றனர்.
இந்தநிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி பரிமளம், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கனகவல்லியை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
தொடர்ந்து தலைமை ஆசிரியையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.