திருப்பரங்குன்றம் அருகே தோஷம் நீக்குவதாக கூறி மாமியார், மருமகளிடம் நகை-பணம் நூதன மோசடி- 2 பெண்களுக்கு வலைவீச்சு
திருப்பரங்குன்றம் அருகே தோஷம் நீக்குவதாக கூறி மாமியார், மருமகளை ஏமாற்றி நூதன முறையில் பணம், நகையை மோசடி செய்த 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே தோஷம் நீக்குவதாக கூறி மாமியார், மருமகளை ஏமாற்றி நூதன முறையில் பணம், நகையை மோசடி செய்த 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
2 பெண்கள் வந்தனர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் ராமானுஜம் நகரில் வசித்து வருபவர் சுந்தர்ராஜ் (வயது 70). நெசவு தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம்(65). இவர்களது மருமகள் பிருந்தா(40). இவர்கள் அவர்களது வீட்டு வாசல் முன் உட்கார்ந்து இருந்தனர். அப்போது அங்கு 30 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் வந்தனர்.
பின்னர் அவர்கள் பஞ்சவர்ணத்திடம், தங்களுக்கு உடலில் உஷ்ணம் இருக்கிறது. அதை தவிர்க்க வேண்டும் என்று கூறி மாத்திரையை கொடுத்து சாப்பிடுமாறு கூறியதாக தெரிகிறது.
நகை தோஷம்
இந்த நிலையில் பிருந்தாவிடம் பொன் (தங்க நகை) தோஷம் இருப்பதால்தான் தங்களுக்கு நகைகள் பாக்கியம் குறைவாக உள்ளது. அதை போக்குவதற்கு வீட்டில் உள்ள நகையை கொண்டு பூஜை செய்தால் தோஷம் நீங்கி விடும் என்று கூறி உள்ளனர். இதை நம்பிய பஞ்சவர்ணம், பிருந்தா ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்த ஒரு பவுன் தங்கதோடும், பிருந்தா கையில் மாட்டி இருந்த அரை பவுன் மோதிரம் மற்றும் பரிகார பூஜை செய்ய ரூ.5,500 கொடுத்தனர்.
அதை வாங்கி கொண்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பூஜை செய்து விட்டு திரும்பி தங்களிடம் வருவதாக கூறி சென்றனர். மேலும் தங்களது செல்போன் எண்ணையும் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் நகையை வாங்கி சென்ற பெண்கள் வராததால் அவர்கள் கொடுத்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் முதலில் ரிங் ஆனது. பிறகு சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது.
நூதன மோசடி
இதனால் பஞ்சவர்ணம், பிருந்தா ஆகிய 2 பேரும் ஏமாந்து விட்டோம். தங்களை அந்த 2 பெண்கள் நூதனமாக மோசடி செய்து ஏமாற்றி சென்று விட்டனர் என அதிர்ச்சி அடைந்தனர்.. பின்னர் இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களான 2 பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மோசடி பெண்களிடம் மாமியார், மருமகள் ஏமாந்து பணம் மற்றும் நகையை இழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.