தூத்துக்குடி அருகே மினிவேனில் 1½ டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
தூத்துக்குடி அருகே மினிவேனில் 1½ டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி அருகே 1½ டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர்.
சோதனை
தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.கோட்டைசாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜன் ஏட்டு கந்தசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்தூர் வேலாயுதபுரம் பஸ் நிறுத்தம் முன்பு வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த மினிவேனை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
கைது
அப்போது, மினிவேனில் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் மினிவேனில் இருந்த புதியம்புத்தூர் கீரைத்தோட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 55), தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த காளீசுவரன் (23), அஜித்குமார் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, மினிவேன் மற்றும் 1½ டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.