தூத்துக்குடி அருகேதண்ணீரில் விசைப்படகு மூழ்கியதால் நடுக்கடலில் தத்தளித்த 8 மீனவர்கள்
தூத்துக்குடி அருகே தண்ணீரில் விசைப்படகு மூழ்கியதால் நடுக்கடலில் தத்தளித்த 8 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தூத்துக்குடி அருகே தண்ணீரில் விசைப்படகு மூழ்கியதால் நடுக்கடலில் 8 மீனவர்கள் தத்தளித்தனர். பின்னர் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விசைப்படகு
தூத்துக்குடியை சேர்ந்த சோரீஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 8 மீனவர்கள் நேற்று காலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் தூத்துக்குடியில் இருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, திடீரென படகின் அடிப்பகுதியில் ஓட்டை விழுந்தது. அதனை சரிசெய்ய முடியாததால், படகுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் தொடர்ந்து அங்கு மீன்பிடிக்க முடியாத மீனவர்கள், கரையை நோக்கி நகரத் தொடங்கினர்.
பத்திரமாக மீட்கப்பட்டனர்
அவர்கள் சிறிது தூரம் வந்தபோது, அதிக அளவில் தண்ணீர் படகுக்குள் புகுந்ததால் விசைப்படகு முழுவதும் கடலில் மூழ்கியது. இதனால் படகில் இருந்த 8 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் ஒரு நாட்டுப்படகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள், கடலில் தத்தளித்த மீனவர்களை பார்த்தனர். உடனடியாக அவர்கள் 8 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.